

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஆம்னி பேருந்து மீது கார் மோதியதில் தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (38). சென்னையில் வசித்து வந்தார். இவரது தம்பி திருமணம் முதுகுளத்தூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கார்த்திக், இவரது மனைவி சூர்யா(35), சென்னையில் பணிபுரிந்து வரும் கார்த்திக்கின் நண்பர்களான பிள்ளையார்
குளம் பிரபாகரன்(30), காளீஸ்வரன் (25), ஓரி வயல் கண்ணதாசன் (22), தேவிபட்டினம் ஜான் கென்னடி (35), சரண்யா (23) ஆகியோர் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு காரில் புறப்பட்டனர். காரை கண்ணதாசன் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம்துறைமங்கலம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்புறத்தில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த பிரபாகரன், காளீஸ்வரன் ஆகிய 2 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 5 பேரும் பலத்த காய
மடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கார்த்திக்கும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சூர்யாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மற்ற 3 பேரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஆம்னி பேருந்து ஓட்டுநர் ராஜசீலன் (45) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.