

புதுச்சேரி: காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்று திரும்பிய போது டூவீலரில் வெடிமருந்து வெடித்து பெண் பலியானார். அவரின் மருமகன் காயம் அடைந்தார்.
வில்லியனூரைச் சேர்ந்த நரிக்குறவ பெண் ஜெரினா (வயது 52). இவர் தனது மருமகன் பாண்டியனுடன் (வயது 45). தமிழக பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு காட்டுப் பன்றியை வேட்டையாட சென்றார். அப்போது பன்றி தாக்க வந்தால் அதன் மீது வீசுவதற்கு வெடி மருந்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.
பன்றியை வேட்டையாடி விட்டு மீதமிருந்த வெடி மருந்துடன் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். வில்லியனூர் கூடப்பாக்கம் சாலையில் இன்று காலை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த வெடிமருந்து திடீரென வெடித்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஜெரினா தூக்கி வீசப்பட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட ஜெரினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பாண்டியன் காலில் தீப்பற்றி எரிந்தது. இதில் பாண்டியன் மயங்கி சாலையில் விழுந்து கிடந்தார்.
காயமடைந்த பாண்டியனை அந்த வழியாக வந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வில்லியனூர் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் காட்சியையும் ஆய்வு செய்தனர்