

சேலம்: சேலத்தில் நூல் வியாபாரி வீட்டில் 50 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மரவனேரி 7-வது குறுக்குத்தெருவில் உள்ள சின்னையா பிள்ளை தெருவைச் சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு (66). இவரது மனைவி மல்லிகா (62). இவர்களது மூன்று மகன்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதியர் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி மேசையின் மீது நகை பெட்டியை வைத்துவிட்டு தூங்கச் சென்றார்.
அதிகாலை 3 மணி அளவில் வீட்டு படுக்கை அறைக்குள் சத்தம் கேட்டு, மல்லிகா, திருநாவுக்கரசு விழித்து பார்த்தனர். அப்போது, மர்ம நபர் ஒருவர், நகைப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடியது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தம்பதி கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் வந்தனர். ஆனால், மர்ம நபர் அதற்குள் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் திருநாவுக்கரசு அளித்த புகாரின் அடிப்படையில், மாநகர காவல் துணை ஆணையர் கவுதம் கோயல், உதவி ஆணையர்கள் பாபு, அசோகன், சரவணகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். போலீஸார் விசாரணையில், வீட்டின் முன்புற கதவை உடைத்து புகுந்த மர்ம நபர் 50 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் தடயவியல் துறை நிபுணர்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவை கொண்டு, போலீஸார் விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.