

சென்னை: மூதாட்டிகளுக்கு இலவச சேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஏமாற்றி அவர்களின் நகை, பணத்தைப் பறித்து மோசடியில் ஈடுபட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவில் உள்ள ஆர்த்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (80). இவர் அப்பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து வருகிறார். அவருக்கு முதியோர் உதவித்தொகை சென்னை அமைந்தகரையில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ஒருமுறை சென்னை வந்து உதவித் தொகையை பெற்றுச் செல்வதை சரோஜா வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதுபோல், இந்த மாதம் உதவித் தொகை பெறுவதற்காக கடந்த23-ம் தேதி வந்த அவர் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அமைந்தகரை கிருஷ்ணா நகைக்கடை அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்திருந்தார். அப்போது, ஆட்டோவை ஓட்டி வந்த இளைஞர் ஒருவர், சரோஜாவிடம் சென்று, ``அருகில் மார்வாடி வீட்டில் இலவச சேலை வழங்குகிறார்கள். கூடவே பணமும் கொடுக்கிறார்கள். நான் உங்களை அங்கு அழைத்துச் செல்கிறேன்'' என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை உண்மையென நம்பியமூதாட்டி, ஆட்டோவில் ஏறியுள்ளார். போகும்போது, ``இப்படி நகைஅணிந்து சென்றால் இலவச சேலைகொடுக்க மாட்டாங்க.. உங்க நகைகளைக் கழற்றி கொடுங்க, ஏழை மாதிரி சென்று சேலையை பெற்றவுடன் உங்களிடமே அதைக் கொடுத்து விடுகிறேன்'' என அக்கறையுடன் கூறியுள்ளார்.
இதை நம்பிய மூதாட்டி தான் அணிந்திருந்த 3 பவுன் நகை, கையில் வைத்திருந்த ரூ.44 ஆயிரத்தை அவரிடம் கொடுத்தார்.
இதையடுத்து, சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு அருகே மூதாட்டியை இறக்கிவிட்டு, `இங்கேயே காத்திருங்கள். சில நிமிடங்களில் வந்து விடுகிறேன்' எனக்கூறி ஆட்டோவில் சென்ற இளைஞர் மீண்டும் திரும்பவே இல்லை. நீண்ட நேரம் காத்திருந்தும் அவர் வராததால் அதிர்ச்சி அடைந்த சரோஜா இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, சம்பவ இடத்தினருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், மூதாட்டி சரோஜாவை ஏமாற்றி நகை, பணத்தைப் பெற்று தலைமறைவானவர் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், எடப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தர் (34) என்பது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநரான இவர் இதே பாணியில் பல மூதாட்டிகளைக் குறி வைத்து நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இவர் மீது ஐசிஎப், வியாசர்பாடி உட்பட 8 காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சுந்தர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.