Published : 01 Jun 2023 06:46 AM
Last Updated : 01 Jun 2023 06:46 AM

இறப்பு தொகை மனு மீது நடவடிக்கை எடுக்க ரூ.1,100 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறை

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு அருகே சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இறப்புத் தொகை கேட்டு அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள ரூ.1,100 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கரிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கற்பகம். இவரது கணவர் பண்டாரி கடந்த 2010-ம் ஆண்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இறப்புத் தொகை கேட்டு, கற்பகம் வருவாய்த் துறையிடம் விண்ணப்ப மனு அளித்தார்.

அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், கற்பகத்தின் உறவினரான சோமசுந்தரம், அப்போதைய குமாரராஜபேட்டை கிராம நிர்வாக அலுவலர் விஜயராகவலுவிடம், கற்பகம் அளித்த மனு தொடர்பாக விசாரித்தார். அதற்கு, கற்பகத்தின் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள ரூ.1,100 லஞ்சமாக அளிக்க வேண்டும் என, விஜயராகவலு தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சோமசுந்தரம், விஜயராகவலு மீது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, விஜயராகவலுவை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி, விஏஓ விஜயராகவலுவிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.1,100- ஐ லஞ்சமாக சோமசுந்தரம் அளித்தார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் லஞ்சம் வாங்கிய விஜயராகவலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், விஜயராகவலு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ரூ.50 ஆயிரம் அபராதம்: இதனையடுத்து, நேற்று முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி இரா.வேலரஸ் தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், இறப்புத் தொகை கேட்டு அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை மேற்கொள்ள ரூ.1,100 லஞ்சம் கேட்ட குற்றத்துக்காக விஜயராகவலுவுக்கு, 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், லஞ்சம் பெற்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தார் சிறப்பு நீதிபதி. இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தன் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x