

சென்னை: பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டை அபகரித்த தம்பதிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள திருவள்ளுவர் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த 2005ம் ஆண்டு அருணா வெங்கட்ராமன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது வீட்டை கல்யாணசுந்தர ராமன் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக அருணா வெங்கட்ராமன், தனது நண்பரான மந்தைவெளியைச் சேர்ந்த சவுந்தரராஜன் பெயரில் பொது அதிகாரப் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.
இதற்கான முன்பணத்தை கல்யாணசுந்தர ராமன், அருணா வெங்கட்ராமனுக்கு கொடுத்துள்ளார். இந்த பொது அதிகார பத்திரத்தை தவறாகப் பயன்படுத்திய சவுந்தரராஜன், அந்த வீட்டை கல்யாண சுந்தரராமன் பெயருக்கு பதிவு செய்வதற்குப் பதிலாக தனது மனைவி பெயரில் மோசடியாக பதிவு செய்துள்ளார்.இதுதொடர்பாக கல்யாண சுந்தரராமன் அளித்த புகாரின்பேரில் ஆயிரம் விளக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சவுந்தரராஜன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.ராஜேஷ்ராஜூ, குற்றம்சாட்டப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த மோசடியில் ஏமாற்றப்பட்ட கல்யாணசுந்தரராமனுக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடியே 9 லட்சம் ரூபாயை 3 மாத காலத்தில் சவுந்தரராஜன் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.