

சென்னை: ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரட்ரிச் வின்சென்ட் (23).இவர் கடந்த வாரம் சுற்றுலாவுக்காக சென்னை வந்தார். வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினார்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற வின்சென்ட், வழிப்பறி கொள்ளையர்கள் தன்னிடம் கத்தி முனையில் லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பறித்து சென்று விட்டதாக புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில்,வழிப்பறி எதுவும் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் சிக்கவில்லை. இதுகுறித்து போலீஸார் கேள்வி எழுப்பியபோது சும்மா, விளையாட்டுக்காக இவ்வாறு புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேலும் அவரது நடவடிக்கை குறித்து ஜெர்மன் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உள்ளனர்.