ஈரோடு | ‘வைரல்’ ஆவதற்காக பிரதான சாலையில் குளித்த இளைஞர் மீது வழக்கு, அபராதம்

ஈரோடு | ‘வைரல்’ ஆவதற்காக பிரதான சாலையில் குளித்த இளைஞர் மீது வழக்கு, அபராதம்
Updated on
1 min read

ஈரோடு: சமூக வலைதளத்தில் புகழ் பெறுவதற்காக, பிரதான சாலையின் போக்குவரத்து சிக்னலில் நின்று குளியல் போட்ட இளைஞர் மீது, 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா போக்குவரத்து சந்திப்பில், மீனாட்சி சுந்தரனார் சாலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர், சிக்னலில் நின்றார். அப்போது, தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பாத்திரத்தில் இருந்த நீரை தலையில் ஊற்றி குளிக்கத் தொடங்கினார்.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கை: அவரைத் தொடர்ந்து வந்த நண்பர்கள், இதனை வீடியோ எடுத்தனர். போக்குவரத்து சிக்னல் விழுந்தும், வாகனத்தை நகர்த்தாமல், அந்த இளைஞர் தொடர்ந்து நீரை தன் மேல் ஊற்றிக் கொண்டு இருந்தார். அந்த சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் அவரை எச்சரித்த பின்பு, அவர் அங்கிருந்து சென்றார்.

நேற்று முன் தினம் நடந்த இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் வெள்ளோட்டைச் சேர்ந்த பார்த்திபன் (26) என்பதும், சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக, இது போன்ற செய்கையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர் ஏற்கெனவே, இரவு நேரத்தில் சாலையில் தூங்குவது, பச்சையாக மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது உள்ளிட்ட விநோதமான விஷயங்களை செய்துள்ளது தெரியவந்தது.

ரூ. 3,500 அபராதம்: இதனை அடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், ஹெல்மெட் அணியாமல் வருதல், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது என 3 பிரிவின் கீழ் ஈரோடு நகர போக்குவரத்து போலீஸார் பார்த்திபன் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவருக்கு ரூ. 3,500 அபராதம் விதிக்கப்பட்டது. இவரைப் போன்று, சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக, இளைஞர்கள் விபரீத செயலில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in