

திருச்சி: துறையூர் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண்ணை கடத்திச் சென்றதை தடுத்த வருவாய் ஆய்வாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள நரசிங்கபுரம் மலையடிவாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு, சட்டவிரோதமாக கிராவல் மண்ணை வெட்டி கடத்திச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, துறையூர் வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் அங்கு சென்று, மண்ணை வெட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பொக்லைனின் சாவியை பறித்தார். ஆத்திரமடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து, பிரபாகரனை அடித்து உதைத்துள்ளனர். மேலும், கழுத்தின் பின்பகுதியில் கடித்ததுடன், தலையில் கற்களால் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
இந்த கொடூரத் தாக்குதலில் பிரபாகரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியதைக் கண்ட கிராம நிர்வாக அலுவலர் சுவாமிநாதன், அவர்களிடமிருந்து பிரபாகரனை மீட்டு, பெருமாள்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், பிரபாகரன் மேல்சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் மா.பிரதீப்குமார் துறையூர் சென்று பிரபாகரனைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில், பிரபாகரன் தந்தபுகாரின்பேரில், துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஊராட்சி மன்றத் தலைவரான மகேஸ்வரன்(48), அவரது ஆதரவாளரான அதே ஊரைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் தனபால்(48), மாணிக்கபுரத்தைச் சேர்ந்த ரா.மணிகண்டன்(26), கீழகுன்னுபட்டியைச் சேர்ந்த க.கந்தசாமி(35) ஆகியோரை கைது செய்தனர்.
தற்காலிக நீக்கம்: இதற்கிடையே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மகேஸ்வரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்குவதாக தெரிவித்துள்ளார்.