

கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள கேஜிஐஎஸ் நிறுவனம் முன்னணி வணிக செயல்முறை ஆலோசனை மற்றும் மேலாண்மை, மென்பொருள் சேவை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் சார்பில், கோவை மாநகர காவல்துறையினரின் பயன்பாட்டுக்காக ‘ஆக்டோபஸ்’ என்ற பிரத்யேக மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவு, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் மூலம் களத்தில் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து உடனுக்குடன் காவல் உயரதிகாரிகளுக்கு பரிமாற்றம் செய்ய இந்த‘ஆக்டோபஸ்’ மென்பொருள் பயன்படும். காவல் ஆணையர்வே.பாலகிருஷ்ணன் வேண்டுகோளின்படி இந்த பிரத்யேகமென்பொருள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இலச்சினையை தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டார்.
டிஜிபி சைலேந்திரபாபு, ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறும்போது,‘‘ஆக்டோபஸ் மென்பொருள் நமது உளவுத்துறை சேகரிப்பு மற்றும் கண்காணிப்பு முயற்சிகளை பலப்படுத்துகிறது. வளர்ந்துவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, விரைவான பதில்களை அளிப்பதை எளிதாக்குகிறது. இந்த மென்பொருள் மூலம் அதிகாரிகள், அதிகார வரம்புக்குள் உள்ள அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தீர்க்க முடியும்,’’ என்றனர்.
கேஜி இன்விக்டா சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயமுரளி பாலகுருசாமி கூறும்போது,‘‘ ஆக்டோபஸ் மென்பொருளை உருவாக்கியதில் மகிழ்ச்சியடைகிறோம். கேஜிஐஎஸ்-ல் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,’’ என்றார்.