

கும்பகோணம்: கும்பகோணத்தில் திருடிய இரு சக்கர வாகனத்துடன் திருச்சிக்கு தப்பி செல்ல முயன்ற 2 பேரை சமூக ஆர்வலர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜசங்கர் மற்றும் போலீஸார், தாராசுரம் ரவுண்டானா அருகில் நேற்று இரவு வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணம் பகுதியிலிருந்து பதிவெண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்தவர்களை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல், வந்த வழியே வேகமாக திரும்பிச் சென்றனர். இதனையடுத்து, போலீஸார் அந்த வாகனத்தை துரத்தி சென்றும், அவர்கள் வேகமாக தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, போலீஸார் தகவல் அளித்தனர். இதையடுத்து கும்பகோணம் பகுதி முழுவதும் போலீஸார் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டும், தங்கள் அருகிலுள்ள தன்னாவலர்களிடம் திருட்டு வாகனம் குறித்து தெரிவித்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இரு சக்கர வாகனத்தை திருடியவர்கள், இந்திராகாந்தி சாலையில் சென்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான ஆர்.ஸ்ரீராம், பி.கதிரவன், பி.கார்த்தி ஆகியோர், அவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் விசாரணையில், திருச்சி, முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த செல்வம் மகன் தர்மா (29), கும்பகோணம், கல்லுப்பட்டறை தெருவைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் கார்த்தி (17) ஆகிய 2 பேரும், கும்பகோணம், மாதுளம்பேட்டை, எல்லையா செட்டி தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் இளையராஜாவின் இருசக்கர வாகனத்தை திருடி, தாங்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, அதிலிருந்த நம்பர் பிளேட்டினை கழற்றிவிட்டு தப்பிச்செல்லும்போது பிடிபட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இதில் தர்மா என்பவர் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். துரிதமாக செயல்பட்டு இருசக்கர வாகன திருடர்களை பிடிக்க உதவிய தன்னார்வலர்களை கும்பகோணம் டிஎஸ்பி பி.மகேஷ்குமார் நேரில் அழைத்து காவல் துறை சார்பாக பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.