Published : 28 May 2023 06:51 AM
Last Updated : 28 May 2023 06:51 AM
உதகை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் விவரங்களை தனியார் தொலைக்காட்சியில் பகிர்ந்த மதபோதகர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த தம்பதியின் 13 வயது மகள், கடந்த ஆண்டு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை காந்தல் பகுதியைச் சேர்ந்த மதபோதகர் சூரி ஸ்டீபன் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து போக்சோ சட்டத்தில் உதகை அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, மத போதகர் சூரி ஸ்டீபனை கைது செய்தனர். இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர், சூரி ஸ்டீபன் ஜாமினில் வெளியே வந்தார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பெயர்களை தனியார் தொலைக்காட்சியில் சூரி ஸ்டீபனின் வழக்கறிஞர் சார்லஸ் வெற்றிவேந்தன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி படிக்கும் பள்ளியில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறுமியின் உறவினர்களும் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பள்ளிக்கு செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக உதகை மேற்கு காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து, காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, சிறுமியின் விவரங்களை தனியார் தொலைக்காட்சியில் தெரிவித்த புகாரில் வழக்கறிஞர் சார்லஸ் வெற்றிவேந்தன், மத போதகர் சூரி ஸ்டீபன் மற்றும் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT