Published : 28 May 2023 11:14 AM
Last Updated : 28 May 2023 11:14 AM
கோவை: கோவை மாநகர காவல்துறையில், ரோந்துப் பணிக்காக ஆட்டோ பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் முக்கியமானது ரோந்துப் பணி. காவல்துறையினர் இருசக்கர வாகனம், ஜீப், வேன் ஆகிய வாகனங்களின் மூலம் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகரகாவல்துறையின் சார்பில், சில மாதங்களுக்கு முன்னர் நடந்து சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணிக்கும் முறை, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மக்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்தது.
அதன் தொடர்ச்சியாக, ஆட்டோ மூலம் ரோந்து செல்லும் திட்டம் கோவை மாநகர காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் துறையினர் சார்பில்,எலக்ட்ரிக் ரோந்து வாகனம் எனப்படும், பேட்டரியால் இயங்கக்கூடிய 2 ஆட்டோ வகை ரோந்து வாகனம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை டிஜிபி சி.சைலேந்திர பாபு நேற்று முன்தினம் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து இந்த ஆட்டோ ரோந்து வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகர காவல்துறையினர் கூறும் போது, ‘‘பொதுமக்கள் பார்த்தவுடன் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக சிவப்பு நிறத்துடன் கூடிய இந்த பேட்டரி ஆட்டோ ரோந்துப் பணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோவில் சைரன்,எச்சரிக்கை ஒலிப் பெருக்கி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
ஆட்டோவில் சென்றவாறு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள், உள்ளே அமர்ந்து மைக் மூலம் ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடலாம். இந்த வாகனத்தின் வெளிப்புறத்தில் கட்டுப்பாட்டு அறை எண் எழுதப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த, ஜீப் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் இந்த ரோந்து ஆட்டோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேசிய அளவில் ரோந்துப் பணிக்கு ஆட்டோ பயன்படுத்துவது இதுதான் முதல் முறை’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT