

சேலம்: சேலம் மாவட்டத்தில், உரிமம் இன்றி செயல்பட்டு வந்த 27 மதுபான பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில், உரிமம் இல்லாமல் செயல்பட்டு வரும் மதுபான பார்களை கண்டறிந்து, அவற்றுக்கு சீல் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் குப்புசாமி, கலால் உதவி ஆணையர் மாறன், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர், சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
அதில், சேலத்தில் புதிய பேருந்து நிலையம் பகுதி, டவுன் ரயில் நிலையம் அருகில், கந்தம்பட்டி, நெத்திமேடு, கொண்டலாம்பட்டி உள்பட 13 இடங்களிலும், மாவட்டத்தில், ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் 14 இடங்களிலும் மொத்தம் 27 மதுபான பார்கள் உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டது.
மதுபானக் கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தால், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.