

தாம்பரம்: பகுதி நேர வேலை தருவதாக கூறி பண மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி தாம்பரம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
செல்போன்களில், பகுதி நேர வேலை வாய்ப்பு என வாட்ஸ் ஆப் மெசேஜ் வரும். அதைதொடர்ந்து ஒரு லிங்க் அனுப்புவர். அதை கிளிக் செய்தவுடன் ஒரு டெலி கிராம் டாஸ்க் குரூப்பில் இணைத்து விடுவர். அந்த குரூப்பில் `யூ டியூப்’, மூவி, லொகேஷன், ஓட்டல் ஆகியவற்றை லைக் மற்றும் ரெவியூ செய்தால் ரூ.50 தருவதாக கூறுவர். அப்படி செய்தால் அந்த பணத்தை உடனே வங்கி கணக்கில் செலுத்துவர்.
தொடர்ந்து அதே வேலையை மேலும் தொடர வேண்டும் எனில் `ப்ரிபெய்டு டாஸ்க்’ என்ற புது டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவர். ஒவ்வொரு `டாஸ்க்’க்கும் வங்கி கணக்கில் பணத்தை முதலீடு செய்த பின் பகுதி நேர வேலைக்கான மொத்த தொகையை காயின் கலெக்டர் இணையதளத்தில் அவர்களுக்கென்று தொடங்கப்பட்ட கணக்கில் `டிஸ்பிளே’ செய்வர்.
அந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமெனில் 10-வது டாஸ்க்குக்கு மேல் ஒரு கோடி ரூபாய் வரை செலுத்துமாறு கூறி ஏமாற்றி விடுவர். இது குறித்து தொடர் புகார்கள் வருவதால் டெலி கிராம், வாட்ஸ் அப், குறுஞ் செய்திகளை பார்க்கும் போது கவனமாக இருந்து பணத்தை இழக்க வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவுரை வழங்கியுள்ளது.