Published : 28 May 2023 04:23 AM
Last Updated : 28 May 2023 04:23 AM
திருச்சி: குளித்தலை அருகே கிணற்றில் இறந்து கிடந்த சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, சிறுமியின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று திருச்சியில் போராட்டம் நடத்தினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சவரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், கலைவாணி தம்பதியின் மகள் தேவிகா(16). மே 24-ம் தேதி காணாமல்போன இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார். சிறுமியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள் தேவிகா-வின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது தாய் கலைவாணி குளித்தலை போலீஸில் புகார் அளித்தும், அதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, நேற்று முன்தினம் இரவு திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த போலீஸார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், உடற்கூராய்வு செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தை நேற்று அவரதுஉறவினர்கள் வாங்க மறுத்தனர்.
மேலும்,சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான நபர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் சிறுமியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, அவரது உறவினர்கள் 2-வது நாளாக நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து அங்கு வந்த குளித்தலை வட்டாட்சியர் புஷ்பா தேவி போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்தவும், உடலை மறு உடற்கூராய்வுக்கு உட்படுத்தவும் உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாக சிறுமியின் உறவினர்கள், அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறுமியின் சடலம் திருச்சி அரசு மருத்துவமனை பிணவறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT