Published : 27 May 2023 06:44 AM
Last Updated : 27 May 2023 06:44 AM

நிதி நிறுவன மோசடி வழக்குகளில் விசிக கவுன்சிலர் உட்பட 10 பேர் கைது

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்குகள் தொடர்பாக, திருச்சி விசிக கவுன்சிலர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொருளாதார குற்றப் பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ.14,168 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளன.

இது தொடர்பாக மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுக் கொடுக்க தொடர் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிதி நிறுவன மோசடி வழக்குகளில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கெனவே 24 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது திருவள்ளூர் வரதராஜநகர் சசிகுமார், ராணிப்பேட்டை சோளிங்கர் உதயகுமார், நெமிலி வட்டம் சயனபுரம் சதீஷ், காவேரிப்பாக்கம் அசோக்குமார், வாலாஜாபேட்டை தாலுகா முனுசாமி, சென்னை மாலதி, வேலூர் காட்பாடி நவீன், செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல, திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரியில் செயல்பட்ட எல்பின் நிறுவனத்தைச் சேர்ந்த திருச்சி பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.240 கோடி மோசடி: மேலும், ஐஎஃப்எஸ் நிறுவன மோசடி தொடர்பாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 7 ஆயிரம் பேரிடம், ரூ.240 கோடி வரை வசூலித்து மோசடி செய்துள்ளார். இதற்காக ரூ.24 கோடி வரை கமிஷன் பெற்றுள்ளார். இந்த வழக்குகளில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரைத் தேடி வருகிறோம்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் உதவியை நாடி உள்ளோம்.

மோசடி வழக்குகளில் சிக்கியவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஹிஜாவு, ஐஎஃப்எஸ் நிறுவனங்கள் மீது முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிதி நிறுவனம் மீது 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். தொடர்ந்து புலன் விசாரணை நடக்கிறது. இவ்வாறு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறினார்.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபாகரன் என்பவர், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு விசிக கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x