Published : 27 May 2023 06:12 AM
Last Updated : 27 May 2023 06:12 AM
திருவண்ணாமலை: வெம்பாக்கம் அருகே 11 வயது சிறுவனை வலுக்கட்டாயமாக வாயில் மதுபானம் ஊற்றியுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த சோதியம் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் 11 வயது சிறுவன்.
இவர், அதே பகுதியில் உள்ள ஒரு நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர், கடந்த 24-ம் தேதி பெற்றோரிடம் விளையாட செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. சிறுவனை பெற்றோர் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே கிராமத் தில் உள்ள ஏரிக்கரையில் சிறுவன் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மயக்கம் தெளிந்ததும், சிறுவனிடம் நடந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் மற்றும் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது, சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக வாயில் மதுபானத்தை, மனோஜ் உள்ளிட்டவர்கள் ஊற்றியதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் தூசி காவல் துறையினர் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விளையாட சென்ற சிறுவனை அழைத்து, அவனது வாயில் மதுபானத்தை வலுக்கட்டாயமாக 4 பேர் ஊற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள பிரபல தனியார் மதுபான கூடத்தில் சிறுவனை அமர வைத்துக் கொண்டு இளைஞர்கள் மது குடிக்கும் காட்சி வெளியான நிலையில், 11 வயது சிறுவனை கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு சம்பவங்களில், காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT