

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் மருத்துவம் பயிலாமல் கிளினிக் நடத்திய 2 போலி மருத்துவர்களை போலீஸார் இன்று(மே 26) கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் மருத்துவக் கல்வி பயிலாமல் 2 பேர் கிளினிக் நடத்தி வருவதாகவும், அங்கு அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவின்பேரில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் அருண்பிரசாத் தலைமையிலான குழுவினர் இன்று பி.அக்ரஹாரம் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
ஆய்வில், ‘நடராஜன் கிளினிக்’ என்ற பெயரில் இயங்கி வந்த கிளினிக்கில் கோணாங்கி அள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மகன் நடராஜன்(52), சின்னசாமி மகன் ராஜேஷ்குமார்(39) ஆகிய இருவரும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. மேலும், அவர்கள் முறையே ஹோமியோபதி, எலக்ட்ரோபதி கல்வித் தகுதிகளை மட்டுமே கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வந்தது.
எனவே, பென்னாகரம் காவல் நிலையத்தில் மருத்துவர் அருண்பிரசாத் அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.