

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக மெரினா நீச்சல் குளம் அருகே 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.
அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்கள் பிரபல பைக் திருடனான திருநின்றவூரை சேர்ந்த 17 வயது சிறுவனும், அவரது கூட்டாளியான சத்ய பிரதீப் (20) என்பதும், திருநின்றவூரில் பைக்கை திருடிவிட்டு, எழும்பூரில் விற்க வந்தபோது போலீஸாரிடம் சிக்கியதும் விசாரணையில் தெரிந்தது.
பிரபல பைக் திருடனான 17 வயது சிறுவன் பகலில் மின்சார ரயிலில் சமோசா விற்பனையும், இரவு நேரங்களில் பைக் திருடுவதையும் தொழிலாகக் கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், சிறுவன் மீது திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்திலும் பைக் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.