

கள்ளக்குறிச்சி: ஆதரவற்றவர்களுக்கு நன் கொடை வழங்குங்கள் எனக் கேட்டு நூதன முறையில் திருடும் கும்பல்களின் செயல்கள் சங்கராபுரம் பகுதியில் சிசிடிவியில் பதிவாகி, அவை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் லைன் தெருவில் காவலர்கள் குடியிருப்பு எதிரேசுதாகரன் என்பவருக்கு சொந்தமான உணவகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த உண வகத்திற்கு நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வந்தார்.
உணவகத்தின் உள்ளே சென்று, சுற்றிப் பார்த்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வந்த அந்த நபர், கடையில் பெண் உரிமையாளர் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று, ஒரு துண்டுச் சீட்டை காண்பித்து, தாங்கள் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் வைத்துள்ளதாகவும், ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றும் சைகை மூலம் கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பெண் உரிமையாளர், முன் பக்கமாக வந்து நில்லுங்கள் எனக் கூறி, ஏதாவது சாப்பிடுகிறீர்களா, அல்லது உதவிதேவையா எனக் கேட்டபோது, அந்த மர்ம நபரோ, தான் வைத்திருந்த நீளமான குறிப்பேட்டை எடுத்து, மேசை மீதிருந்த செல்போன் மீது வைத்து, காண்பித்துள்ளார். பெண் உரிமையாளர் குறிப்பேட்டை பார்க்கும் கவனத்தில் இருந்தபோது, மேசை மீதிருந்த செல்போனை அந்த மர்ம நபர் திருடிய செயல்கள் கடையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த நபர் வெளியே சென்றசிறிது நேரத்தில் கடை உரிமையாளர் செல்போனை தேடிய போது, அது மாயமாகியிருந்தது. உடனே சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த நபர் செல்போனை திருடிய செயல்கள் பதிவாகியுள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளர் அளித்தப் புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவத்தில் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் சங்கராபுரம் பகுதியில் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.