

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிமாநில மதுபான பாட்டில் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, பால்நாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (31), என்பவர் கர்நாடக மாநில மதுபான பாட்டில்களை அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் இளவரசனிடம் இருந்து 745 லிட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், வெளிமாநில மதுபான பாட்டில்களை இளவரசன் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் அவர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விடுத்த பரிந்துரையை ஏற்று, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அளித்த உத்தரவின் பேரில், ஜோலார்பேட்டை காவல் துறையினர் இளவரசன் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தை பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.