

விருதுநகர்: பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளரை லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
காரியாபட்டி அருகே உள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (48). அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவர் தனக்குச் சொந்தமான இடத்துக்கு பட்டா மாறுதல் வேண்டி மாந்தோப்பு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பட்டா மாறுதல் கொடுக்க வி.ஏ.ஓ குமார் (50) என்பவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன் இது குறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இன்று காலை மாந்தோப்பு கிராமத்தில் உள்ள விஏஓ அலுவலகத்தில், கிருஷ்ணனிடம் கிராம உதவியாளர் ராஜா கண்ணன் (52) என்பவர் ரூ.6000 லஞ்சம் பெற்று அதை வி.ஏ.ஓ குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வி.ஏ.ஓ குமார் மற்றும் கிராம உதவியாளர் ராஜா கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.