Published : 24 May 2023 06:19 AM
Last Updated : 24 May 2023 06:19 AM

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி; சிலைகள் சேதம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்தவர் பிடிபட்டார்

திருப்பூர்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சியின்போது சிலைகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில், கோபுரத்தில் பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. வழக்கம்போல் நேற்று அதிகாலை கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்தபோது, உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததையும், கோயிலுக்குள் இரண்டு உண்டியல்களை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும், தெற்கு உள்பிரகார வளாகத்தில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ள பகுதியில் கோபுரங்களின் கலசம் உடைக்கப்பட்டிருந்ததையும், சிலைகள் மீது அணிவித்திருந்த ஆடைகள், அவிநாசிலிங்கேஸ்வரர் மீது இருந்த பொருட்கள் உள்ளிட்டவை களைந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீஸார் சென்று விசாரித்தனர்.

இதில் முருகன் சன்னதியில் வெண்கலத்தால் செய்த வேல், சேவல் கொடியுள்ள 2 வேல்கள் மற்றும் உபகாரப் பொருட்கள் காணவில்லை என்பது தெரியவந்தது. கோயில் பெரிய கோபுரம் நிலை பகுதியில் சத்தம் கேட்டதால் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அங்கு பதுங்கி இருந்தவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர்.

இதில், பிடிபட்ட நபர் அவிநாசியை அடுத்த சாவக்கட்டுபாளையம் அருகே உள்ள வெள்ளமடையை சேர்ந்த சரவணபாரதி (32) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததும், நேற்று அதிகாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் கொள்ளை முயற்சியில் ஈடுபட புகுந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து வெண்கலத்தாலான வேல், சேவல் கொடி மற்றும்உபகாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சரவணபாரதி அளித்த வாக்குமூலத்தில், "தன்னை சிலர் தாக்கிவிட்டதாகவும், தான் முன்பே இறந்துவிட்டேன். தற்போது ஆவியாக உள்ளே வந்தேன்" என்றார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், "அவர் ஏற்கெனவே மனநல பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால், தற்போது அவர் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளாரா அல்லது பிடிபட்டவுடன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

இந்து அமைப்புகள் போராட்டம்: முன்னதாக, தகவல் அறிந்து வந்த இந்து அமைப்பினர், கோயில் முன்பு கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால், கோயிலில் நேற்று கால பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. பக்தர்களும் அனுமதிக்கப்படாததால் வேதனையடைந்தனர்.

மேலும், கோயிலில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனக் கூறி, அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து, கோவை - அவிநாசி நெடுஞ்சாலையில் இந்து அமைப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கிருந்த கடைகளை மூடக் கூறியும், சாலையோரம் இருந்தவர்களை மறியலில் ஈடுபட வலியுறுத்தியும் பேசினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிடாததால், 10-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ க.செல்வராஜ், மருதாசல அடிகளார், குமரகுருபர சுவாமிகள், வரதாசல அடிகளார், காமாட்சி தாச சுவாமிகள், அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் கோயிலுக்கு சென்று பார்வையிட்டனர். அவிநாசி எம்எல்ஏ ப.தனபால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x