

கும்பகோணம்: சிறுமியை திருமணம் செய்ய இருந்த கன்னியாகுமரி இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கும்பகோணத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கன்னியாகுமரி ஆரல்வால்மொழியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் மகன் கவின் (21), இருவரும் செல்போனில் உள்ள விளையாட்டு மூலம், தொடர்பு கொண்டு அண்மைக் காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கவின், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியதால், கடந்த 17-ம் தேதி அச்சிறுமி, வீட்டைவிட்டு வெளியேறி, கன்னியாகுமரியில் அவரைத் தேடிச் சென்றார். சிறுமி காணாததையொட்டி, சுவாமிமலை காவல் நிலையத்தில் தந்தை புகாரளித்தார்.
புகாரின் பேரில், போலீஸார், அவர்களுடைய செல்போன் எண்ணில் பேசி, 2 பேரையும் வரவழைத்தனர்.
இதனையடுத்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சி.நாகலெட்சுமி மற்றும் போலீஸார், அச்சிறுமியை மீட்டு, கவினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் காலை ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, கவினை அடுத்த மாதம் 5-ம் தேதி வரை புதுக்கோட்டைச் சிறையில் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்