

மதுரை: துபாயிலிருந்து மதுரை வந்த கீழக்கரையைச் சேர்ந்த விமானப் பயணியிடம் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்துக்கு துபாயிலிருந்து வந்த தனியார் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் துபாயிலிருந்து மதுரை வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத் துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த நசீம் என்ற பயணியின் உடைமைகளைச் சோதனையிட்டனர்.
அப்போது அவரது பையில் இருந்து பசை வடிவிலான தங்கம் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மொத்த எடை 1 கிலோ 565 கிராம். இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதையடுத்து வான் நுண்ணறிவுப் பிரிவினர் கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்து நசீமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.