

மதுரை: விருதுநகரில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கச் சென்ற சென்னை மாணவி, மதுரையில் நேற்று திடீரென உயிரிழந்தார்.
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகள் அபிநந்தனா(15). தனியார் பள்ளியில்10-ம் வகுப்பு படித்துவந்தார். கூடைப் பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், விருதுநகரில்நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கச் சென்ற சென்னை அணியில் இடம் பெற்றிருந்தார்.
போட்டியில் பங்கேற்ற அவர்கள் ரயில் மூலம் நேற்று காலை சென்னை திரும்ப திட்டமிட்டனர். விருதுநகரில் இருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து ரயில் நிலையத்துக்கு நடந்து சென்றனர். ரயில்நிலையம் முன்பு திடீரென அபிநந்தனா மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த திலகர்திடல் போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறி்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘மாணவிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால்,மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் போட்டியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்துள்ளார். இறப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது’’ என்றனர்.