

கரூர்: கரூர் அருகே மாந்தோப்பில் வசித்த தம்பதியினர் நேற்று கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கரூர் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
கரூர் மாவட்டம் செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவருக்கு, வாங்கல் அருகே ஓடையூரில் சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. இந்த மாந்தோப்பை கடந்த 19 ஆண்டுகளாக, திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காந்தி நகரைச் சேர்ந்த தங்கவேல்(67) மற்றும் அவரது மனைவி தைலி(61) ஆகியோர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தனர். மேலும், அங்கேயே குடிசை அமைத்து வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை வேலைக்கு வரும் பெண்கள் தோப்புக்கு சென்றபோது, அங்கு தங்கவேல், தைலி ஆகியோர் ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் மற்றும் வாங்கல் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதும், தைலி அணிந்திருந்த நகைகளை காணவில்லை என்பதும், சம்பவ இடத்தில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து, வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கரூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, நகைக்காக இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.