

விருதுநகர்: கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி இன்று தீக்குளிக்க முயன்றார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் ஏராளமானோர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்தனர். மனுக்கொடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் அவர்கள் கொண்டுவரும் உடமைகள் அனைத்தும் நுழைவாயில் பகுதியில் போலீஸாரால் சோதனை நடத்தப்பட்ட பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்த முதியவர் ஒருவர் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார். அருகிலிருந்தவர்கள் ஓடிச்சென்று பெட்ரோல் கேனைப் பறித்து முதியவரை மீட்டனர். இதைப் பார்த்து அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் முதியவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தற்கொலைக்கு முயன்றவர் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்த சின்னதம்பி (78) என்பதும், சென்னையில் பள்ளிக் கல்வித்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றதும் தெரியவந்தது.
மேலும் சின்னதம்பி கூறுகையில், ''கடந்த 1983ல் சாத்தூரில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கினேன். தற்போது அந்த வீட்டில் வழக்கறிஞராக உள்ள மூத்த மகன் சிவகுமார் ஆக்கிரமித்துக்கொண்டு என்னை துரத்துகிறார். எனது வீட்டை மீட்டுத்தருமாறு வருவாய்த்துறை, காவல்துறையினரிடம் பலமுறை மனுக்கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்த தற்கொலைக்கு முயன்றேன்'' எனத் தெரிவித்தார். அதையடுத்து, சூலக்கரை காவல் நிலையத்திற்கு சின்னதம்பியை போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.