Published : 22 May 2023 06:40 AM
Last Updated : 22 May 2023 06:40 AM
சென்னை: தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் விற்பனை செய்ததாக சென்னையில் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாஞ்சா நூல் பட்டத்தால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மாஞ்சா நூல் பட்டம் பறக்க விட சென்னை காவல் ஆணையர் தடை விதித்தார். மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிடுபவர்கள், அந்த வகை பட்டங்களை விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாஞ்சா நூல் பட்டங்களுக்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை முழுவதும் போலீஸார் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி 261 கடைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 61 மாஞ்சா நூலால் ஆன பட்டம் மற்றும் 2,118 மீட்டர் மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஆன்லைன் மூலம் பட்டம், மாஞ்சா நூல்களைவாங்கி, சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பவர்கள், பறக்க விடுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT