வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 65 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மனைவி ராஜேஸ்வரி (65). கணவர் உயிரிழந்துவிட்டதால், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் மணிகண்டன் நாமக்கல்லிலும், மகள் சத்யபிரியா திண்டுக்கல்லிலும் அவர்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேஸ்வரியின் வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டுக்குள் கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் ராஜேஸ்வரி உயிரிழந்து கிடந்துள்ளார்.

தகவலறிந்த திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டுக்குள் இருந்த பீரோ திறக்கப்பட்டு, வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. மேலும், பீரோவில் இருந்த 65 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

ராஜேஸ்வரியிடம் அவரது மகள் சத்யபிரியா மே 14-ம் தேதி பேசி உள்ளார். அதன்பிறகு ராஜேஸ்வரி செல்போனை எடுக்கவில்லை. அக்கம்பக்கத்தினரும் மே 14-ம் தேதி ராஜேஸ்வரியைப் பார்த்துள்ளனர். எனவே, ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் ஆகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மூதாட்டியை கொன்று நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ள சம்பவம் தொடர்பாக தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in