ஓசூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரிப்பு: மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கும் அபாயம்
ஓசூர்: ஓசூரில் கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு தமிழகம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக வடமாநில இளைஞர்கள் பணிபுரிகின்றனர்.
இங்கு பணிபுரியும் வ டமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர்.
எனவே, இவர்களை மையமாகக் கொண்டு புகையிலைப் பொருட்கள் மறைமுக விற்பனை செய்வது அதிகரித்து இருந்த நிலையில், போலீஸார் தொடர் நடவடிக்கையால் தற்போது, புகையிலைப் பொருட்களின் புழக்கம் கட்டுக்குள் வந்துள்ளது.
அதேநேரம், பீடாக் கடைகள் மற்றும் சில் வீடுகளில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை அதிகரித்துள்ளது. கஞ்சா சாக்லேட்டைப் பயன்படுத்தும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இதற்கு அடிமையாகும் நிலை உள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறியதாவது: ஓசூரில் சில பீடாக் கடைகளில் கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்கின்றனர். இந்த சாக்லேட் வெளி மாநிலத்தில் தயாரிக்கப்படும், இதை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாங்கி வந்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.
இதைப் பயன்படுத்தும் நபர்களால் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதை போலீஸார் காண்காணித்துத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவல்துறை எச்சரிக்கை: காவல்துறை வட்டாரங்களில் சிலர் கூறியதாவது: கஞ்சா சாக்லேட் என்பது சிறிய உருண்டையாக இருக்கும். வடமாநிலங்களில் இதை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. மேலும், அங்கு இயல்பாக விற்பனை செய்யப்படுவதோடு, திருமணம் போன்ற விழாக்களில் இதைப் பயன்படுத்துகின்றனர்.
ஓசூரில் கஞ்சா சாக்லேட்டை பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதை அங்கிருந்து வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
இதைத் தடுக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
