Published : 18 May 2023 06:34 AM
Last Updated : 18 May 2023 06:34 AM
சென்னை: விருகம்பாக்கத்தில் ரவுடியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் ரவுடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா என்ற தீனதயாளன் (22). ரவுடியான இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன. குண்டர்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் வெளியே வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் உள்ள பஞ்சர் கடையின் வாசலில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தீனதயாளனை நோக்கி நாட்டு வெடிகுண்டை வீசினர். அது குறி தவறி, பஞ்சர் கடை மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதனால், ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சர் கடை சேதம் அடைந்தது.
தீனதயாளன் தப்பி ஓடினார். அவரை 2 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்க விரட்டினர். தயாராக நின்றிருந்த மேலும் சிலரும் தீனதயாளனை தாக்கப் பாய்ந்தனர். அதற்குள் வெடிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். அவர்கள் தாக்குதல் நடத்தவந்த கும்பலைப் பிடிக்க முயன்றனர்.
நிலைமை மோசமானதைப் புரிந்து கொண்ட கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களிலேயே தப்பியது. தீனதயாளன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தகவல் அறிந்து விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் நிகழ்விடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வெடிகுண்டு சிதறல்களைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தனிப்படை போலீஸார் ஆய்வு செய்தனர்.
கொலை முயற்சியில் ஈடுபட்டது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சேட்டு என்ற விக்கி மற்றும் அவர்களது கூட்டாளிகள் என்பது அதன்மூலம் தெரியவந்தது.
இது தொடர்பாக சேட்டு, அவரதுகூட்டாளிகள் அருண், ஈஸ்வரன், சின்னதம்பி, சஞ்சய் என்ற கொரில்லா ஆகிய 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``தீனதயாளனுக்கும், சேட்டுவுக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்றுமுன்தினம் தீனதயாளன் மதுபோதையில் சேட்டுவை அவரது பிறந்தநாள் விழாவில் வைத்து தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீனதயாளனை தீர்த்துக் கட்ட முயன்றுள்ளார்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT