Published : 18 May 2023 06:30 AM
Last Updated : 18 May 2023 06:30 AM
திருச்சி: கள்ளச்சாராயம், சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக மத்திய மண்டல மாவட்டங்களில் கடந்த 5 மாதங்களில் 13,508 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய மண்டல ஐஜி க.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மே 14-ம் தேதி முதல் கள்ளச்சாராயம் மற்றும் புதுச்சேரி மது வகைகளை ஒழிக்க தீவிரசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நிரந்தரமாக 8 இடங்களில் உள்ள எல்லை சோதனைச்சாவடிகளுடன், தற்போது பல இடங்களில் கூடுதலாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனால், கடந்த 3 நாட்களில் மட்டும் திருச்சியில் 102, புதுக்கோட்டையில் 90, கரூரில் 159, பெரம்பலூரில் 73, அரியலூரில் 70, தஞ்சாவூரில் 149, திருவாரூரில் 143, நாகப்பட்டினத்தில் 96, மயிலாடுதுறையில் 77 என மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 962 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 19,162 லிட்டர் புதுச்சேரி சாராயம், 102 லிட்டர் கள்ளச் சாராயம், 1,389 லிட்டர் சாராய ஊறல்கள், 450 லிட்டர் கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவை தவிர சட்டவிரோதமாக சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்ட 1,268 லிட்டர் மது வகைகளும், 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 2023, ஜன.1-ம் தேதியிலிருந்து மே 16-ம் தேதி வரை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச் சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளத்தனமாக சில்லறை விலையில் மது விற்பனை செய்தவர்கள் என 13,331 மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13,508 பேர்கைது செய்யப்பட்டனர். இவர்களில், 31 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய மண்டல மாவட்டங்களில் சாராயத்தை ஒழிக்கும் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தொடர்தேடுதல் சோதனை நடத்தப்படும் எனவும், கள்ளச் சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் எனவும்ஐஜி க.கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT