ரூ.1,000 கோடி மோசடி விவகாரம்: கோவையில் கூடுதல் டிஜிபி விசாரணை

ரூ.1,000 கோடி மோசடி விவகாரம்: கோவையில் கூடுதல் டிஜிபி விசாரணை
Updated on
1 min read

கோவை: கோவை பீளமேட்டில் இயங்கிவந்த தனியார் நிதி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், கேரளாவிலும் ஏராளமான கிளைகள் செயல்பட்டு வந்தன. பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு அதிக வட்டி தரப்படும் என இந்நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், ரூ.1,000 கோடி வரை மோசடி செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கை விசாரிக்க, டிஎஸ்பி முருகானந்தம், இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், லட்சுமி, வசந்தி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று கோவை வந்த தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் முடக், நிதி மோசடி குறித்தும், அதன் விசாரணை நிலை குறித்தும் தனிப்படையினரிடம் விசாரித்தார். விசாரணையை துரிதப்படுத்தவும், தொடர்புடைய நபர்களை கைது செய்து, அவர்கள் வாங்கி குவித்த சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யவும் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in