ஆவடி | ரயில் நடைமேடையில் கத்தியை உரசி பயணிகளை அச்சுறுத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது; ஒருவருக்கு வலை

ஆவடி | ரயில் நடைமேடையில் கத்தியை உரசி பயணிகளை அச்சுறுத்திய 2 கல்லூரி மாணவர்கள் கைது; ஒருவருக்கு வலை
Updated on
1 min read

ஆவடி: ஆவடி அருகே மின்சார ரயிலில் தொங்கியபடி, ரயில் நிலைய நடைமேடையில் பட்டா கத்தியை உரசிச் சென்று பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய 2 கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

அரக்கோணத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயிலின் ஒரு பெட்டியில், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தை தாண்டி ரயில் வந்தபோது, 3 மாணவர்கள் ரயில் படிக்கட்டில் தொங்கியபடி நடைமேடையில் 2 அடி நீளம் உள்ள பட்டாக்கத்தியை உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. மேலும், பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதைப்பார்த்த பயணிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர். இச்செயலை ரயில் பயணி ஒருவர், செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து, ஆவடி ரயில்வே பாதுகாப்பு படையினர், ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் (பொ) சசிகலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்புடைய மாணவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், 2-ம் ஆண்டு மாணவர்களான திருவள்ளூர் ஈக்காடுவைச் சேர்ந்த அபிஷேக், திருவூரைச் சேர்ந்த சரண்ராஜ் ஆகிய இருவரை நேற்று ரயில்வே போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்குத் தொடர்பாக திருநின்றவூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in