Published : 16 May 2023 06:24 AM
Last Updated : 16 May 2023 06:24 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் அன்பழகன் (32). இவர், குப்பம் கிராமத்தில் மதுவிலக்கு கண்காணிப்புப் பணியில் நேற்று முன்தினம் மாலை ஈடுபட்டுள்ளார். அப்போது, குப்பம் அரசுப் பள்ளி அருகே 4 பேர், நிதானம் இழந்து ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்தனர். அவர்களது செயலை கண்டித்த காவலர் அன்பழகன், அனைவரையும் வீட்டுக்கு செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால், இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காவலர் அன்பழகனுக்கு மிரட்டல் விடுத்து 4 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரையும் பிடித்து நடத்திய விசாரணையில், குப்பம் குளத்துமேட்டு தெருவில் வசிக்கும் ராணுவ வீரர்களான சுப்பிரமணி மகன்கள் பழனி (36), முருகன் (28),ஐயப்பன் (25) மற்றும் விவசாயி மணி மகன் சரவணன் (28) என்பது தெரியவந்துள்ளது.
அரசு ஊழியரை பணியை செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது ஆகிய பிரிவுகளில் கண்ணமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர். நகரில் பணியாற்றும் பழனி, ஐயப்பன், அசாமில் பணியாற்றும் முருகன் ஆகியோர் விடுமுறையில் சொந்த கிராமத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் மூவரும் தொடர்ந்து பல்வேறு ரகளையில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT