

புதுச்சேரி: புதுச்சேரியில் தமிழக மதுபானங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு, தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுவதாகவும், எரி சாராயம் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ள சூழலில் புதுச்சேரி கலால் துறையின் வட்டாட்சியர், கலால் துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப் படையினர் பல பகுதிகளிலும் தங்களது ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
1,425 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: இது பற்றி கலால் துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், “புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த தனிப் படையானது இதுவரை ரூ. 66.33 லட்சம் மதிப்புள்ள 433 பெட்டிகளில் மதுபானங்களை கைப்பற்றியுள்ளது. 1,425 லிட்டர் எரி சாராயமும் கைப்பற்றப்பட்டுள்ளன. மூன்று வாகனங்களையும் கைப்பற்றியுள்ளோம்.
இச்சம்பவங்களில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் நடந்துள்ள சூழலில், எரிசாராய கடத்தல் குற்றங்களில் ஈடுபடுவோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைப்போம்" என்று தெரிவித்தார். இதற்கிடையே புதுச்சேரி - தமிழக எல்லைப் பகுதிகளில் எரி சாராய கடத்தல் தடுப்பு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.
உருளையன்பேட்டை போலீஸார் பேருந்து நிலையத்தில் ரோந்து சென்ற போது விழுப்புரம் பேருந்துகள் நிறுத்தம் பகுதியில் நின்றிருந்த இருவரின் பைகளில் இருந்து 86 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருச்சிக்கு விற்பனைக்கு எடுத்து செல்வதாக வாக்கு மூலம் தந்த லாஸ்பேட்டை சிவக்குமார், செயின் பால்பேட் லூசி மரியநாதன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.