ஜேடர்பாளையத்தில் குடிசைக்கு தீ வைப்பு - 15 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு

ஜேடர்பாளையத்தில் குடிசைக்கு தீ வைப்பு - 15 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து கண்காணிப்பு

Published on

நாமக்கல்: ஜேடர்பாளையத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைக்கு தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறித்து ஏடிஜிபி, ஐஜி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பரமத்திவேலூர் அடுத்த ஜேடர்பாளையம் சரளைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் அப்பகுதியில் வெல்லம் உற்பத்தி ஆலை நடத்தி வருகிறார். இவரது ஆலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி இரவு ஆலை அருகே உள்ள குடிசையில் வட மாநிலத் தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மர்ம நபர்கள் குடிசைக்கு தீ வைத்துவிட்டுத் தப்பினர்.

இதில், ராகேஷ் (19), சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஜேடர்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் 15 இடங்களில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலை சந்திப்பு உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீ வைக்கப்பட்ட குடிசையை ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) சங்கர், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.

மேலும், ஈரோடு, நாமக்கல் மாவட்ட எஸ்பி-க்கள் தலைமையில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்து: ஐஜி தகவல் - மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறியதாவது: ஜேடர்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் இரவு நேரத்தில் 20 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர்,

கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக மேற்கு மண்டலத்தில் உள்ள கேரள, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மேற்கு மண்டலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in