Published : 14 May 2023 04:05 AM
Last Updated : 14 May 2023 04:05 AM
தாம்பரம்: வன உயிரினமான கீரிப்பிள்ளை உரோமத்தைக் கொணடு தயாரிக்கப்பட்ட பெயிண்டிங் பிரஸ் பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்ததாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து 10 ஆயிரம் பெயிண்டிங் பிரஸ்களை பறிமுதல் செய்தனர்.
சென்னை அடுத்த பல்லாவரத்தில் வெள்ளிக்கிழமைகளில் வாரசந்தை நடப்பது வழக்கம். வன உயிரின மான கீரிப் பிள்ளைகளை சட்ட விரோதமாக கொன்று அதன் உரோமங்ளை எடுத்து ஓவியம் வரையும் பெயிண்டிங் பிரஸ்களை தயாரித்து இந்தசந்தையில் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக தாம்பரம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் வார சந்தைக்கு விரைந்த வனத்துறையினர் அங்கு விற்பனைக்கு இருந்த ஓவியம் வரையும் பிரஸ்களை சோதனை செய்தனர். இதில் அவை கீரிப்பிள்ளையின் உரோமம் என்பதை உறுதி செய்து, விற்பனை செய்த தாம்பரத்தை சேர்ந்த முகமது ரவூத்தர் என்பவரை கைது செய்தனர்.
10,000 பிரஸ்கள் பறிமுதல்: பின்னர் அவர் அளித்த தகவலில் அடிப்படையில் மண்ணடியில் தனியார் கிடங்கில் இருந்த சுமார் 10,000 பிரஸ்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து விற்பனை செய்தவரை வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வன விலங்குகள் தோல்கள், உரோமம், நகங்கள், பற்கள் போன்ற எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தக் கூடாது என தடை உள்ளது. இதை பொருட்படுத்தாமல் சிலர் திருட்டுத்தனமாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிறுவனத்துக்கு சீல்: ஏற்கெனவே ஒரு தனியார் நிறுவனம் கீரிப்பிள்ளையின் முடிகளை கொண்டு பெயிண்டிங் பிரஸ் தயாரித்து வந்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு அரசு தடை விதித்து சீல் வைக்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் குடோனில் பல ஆயிரக் கணக்கில் தயாரிக்கப்பட்ட பிரஸ் வகைகள் உள்ளன.
இவற்றை சிலர் திருடி வந்து இதுபோல் சந்தைகளில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இவர்கள் யார் இவர்களுக்கு பின்னணி இருப்பவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT