

திருவள்ளூர்: புழல் மத்திய சிறையில் மதிய உணவின் போது சிக்கன் அளவு குறைவாக உள்ளது என சிறைத் துறை அதிகாரியை மிரட்டியதாக கைதி ‘போலீஸ் பக்ருதீன்’ மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாத வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் பக்ருதீன்’ என்பவர் திருவள்ளூர் மாவட்டம், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸ் பக்ருதீன் தனக்கு சிறையில் வழங்கப்பட்ட மதிய சாப்பாட்டில் சிக்கன் அளவு குறைவாக இருப்பதாக குறை கூறியதோடு மட்டுமில்லாமல், சிறைத் துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சிறைத் துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ் பக்ருதீன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506 (1) மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ், புழல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.