

விருதுநகர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை விருதுநகரில் போலீஸார் இன்று மாலை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து சனிக்கிழணை குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் திருச்சி வந்தபோது எஸ்-1 கோச்சில் வந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒரு டிராவல் பேக் கொண்டு வந்துள்ளார். இந்த பேக்கை மிகவும் பாதுகாப்பாகவும், போலீஸார் ரோந்து சுற்றி வரும்போது மறைத்து வைத்தும் பயணித்துள்ளார். இதைக் கண்காணித்த சக பயணிகள் ரயில்வே காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
மணப்பாறை ரயில் நிலையம் வந்தபோது, ரயில்வே போலீஸார் ரயிலுக்குள் ஏறி சோதனை நடத்தி வந்தனர். இதைப்பார்த்த அந்த மர்ம நபர், தான் கொண்டுவந்த டிராவல் பேக்கை இருக்கையிலே வைத்துவிட்டு ரயிலை விட்டு இறங்கி தப்பிச் சென்றுவிட்டார்.
பின்னர், ரயில் மதுரை வந்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த டிராவல் பேக்கை ஆர்பிஎஃப் போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸார் கண்காணித்து வந்தனர். ஆனால், கேட்பாரற்றுக் கிடந்த அந்த பேக்கை எடுக்க யாரும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் விருதுநகர் ரயில் நிலையத்தில் மர்ம பேக்கை பறிமுதல் செய்து இறக்கி வைத்தனர்.
பின்னர், விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே காவல் நிலையத்திற்கு மர்ம பேக்கை போலீஸார் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது அதில் 6 பொட்டலங்களில் 15 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை மதுரையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விருதுநகர் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.