

சென்னை: ஆன்லைனில் வர்த்தகம் செய்யும் ஆர்வத்தில் இணைய லிங்க் மூலம் ரூ.30 ஆயிரம் பணத்தை பறிகொடுத்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதில் தலைமறைவாக இருந்த கொல்கத்தாவை சேர்ந்த 3 பேரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீஸ் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவர் பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வசிக்கிறார். இவரது மூத்த மகள் மகாலட்சுமி (19), அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இளைய மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
சாந்தி தனக்கு வரும் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். இதனால், வீட்டில் இருந்தபடி ஏதாவது வேலை செய்துகொண்டே படிப்பை தொடரலாம்என்ற எண்ணத்தில் இருந்தார்மகாலட்சுமி. இதற்கான வாய்ப்புகளை இணையதளங்களிலும் தேடிவந்தார்.
அப்போது, ‘ஆன்லைன் வியாபாரம் செய்யலாம்’ என்ற அறிவிப்புடன் சமூக வலைதளத்தில் ஒரு லிங்க் வந்தது. அதன் மூலம் மகாலட்சுமி ரூ.30 ஆயிரம் அனுப்பியுள்ளார். அது மோசடி விளம்பரம் என்று பின்னர் தெரியவந்துள்ளது.
கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி பணத்தை இழந்துவிட்டோமே என்று குடும்பத்தினர் வேதனையில் இருந்துள்ளனர். இந்நிலையில், மாணவி மகாலட்சுமி கடந்த ஏப்.2-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்து வந்த முத்தியால்பேட்டை போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, ஆன்லைன் வியாபாரம் என்று கூறி வலைதளத்தில் லிங்க் அனுப்பி மோசடி செய்தது யார் என வட சென்னை காவல்இணை ஆணையர் ரம்யா பாரதிமேற்பார்வையில் முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சபியுல்லா தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், பணப் பறிப்பில் ஈடுபட்டது மேற்கு வங்கத்தை சேர்ந்த கும்பல் என தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீஸார் அங்கு சென்று, கொல்கத்தாவை சேர்ந்த அமானுல்லா கான் (20), முகமது பைசல் (21),முகமது ஆசிப் இக்பால் (22)ஆகிய 3 பேரை கைது செய்தனர்.அவர்களை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு கடந்த 11-ம் தேதி சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மாணவி மகாலட்சுமி போல மேலும் பலரை இந்த கும்பல் ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். வலைதளங்களில் வரும் இதுபோன்ற லிங்க்குகளை நம்பி பொதுமக்கள்ஏமாற வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தி யுள்ளனர்.