புதுக்கோட்டை | உறவினர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டவர் கைது

பாலசேகர். (அடுத்த படம்) பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள்.
பாலசேகர். (அடுத்த படம்) பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள்.
Updated on
1 min read

புதுக்கோட்டை: திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அவனியா நகரைச் சேர்ந்தவர் பாலசேகர்(55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவர், தனது உறவினரான (மனைவியின் சகோதரி) கறம்பக்குடி அருகே கரு தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி கவிதா(40)வுக்கு புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் ஜவுளிக் கடை வைத்துக் கொடுத்துள்ளார். மேலும், பல்வேறு தவணைகளில் ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொடுத்த பணத்தை பாலசேகர் திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு கவிதா மறுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில் கரு தெற்குத் தெருவில் வீட்டில் தனியாக இருந்த கவிதாவிடம் பணத்தைக் கேட்டு பாலசேகர் தகராறு செய்துள்ளார்.

அப்போது, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் குண்டை வீட்டில் வீசியுள்ளார். இதில் அவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் கவிதாவை நோக்கி சுட்டுள்ளார். இதில், அதிர்ஷ்டவசமாக கவிதா மீது குண்டுபடவில்லை. அதன்பிறகு, அங்கிருந்து பாலசேகர் சென்றுவிட்டார்.

இதனிடையே, அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் வடகாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாலசேகரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in