

கும்பகோணம்: கும்பகோணத்தில் நகைக் கடை ஒன்றில் ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைத் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கும்பகோணம் பெரிய கடை தெருவில் 100-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள நகைக் கடை ஒன்றில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க 2 பேர் தங்க நகைகள் வாங்குவது குறித்து கடை உரிமையாளரிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, உரிமையாளர் மற்றும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி விட்டு, பணம் வைக்கும் பெட்டியில் இருந்த 134 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்கு பிறகு பணப்பெட்டியில் இருந்த நகைகள் மாயமானது குறித்து அறிந்த கடை உரிமையாளர், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது அந்த 2 மர்ம நபர்கள் நகைகளை திருடிச் சென்று தெரிய வந்தது.
இது குறித்து நகைக் கடை உரிமையாளர் பாபு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் கடையிலுள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 7 லட்சம் ஆகும். எப்பொழுதும் பரபரப்பாக இயங்கி வரும் பெரிய கடை தெருவில் பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.