

தஞ்சாவூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இன்னம்பூரைச் சேர்ந்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், இன்னம்பூர் காலனி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார் (23). இவர் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் 17 வயது சிறுமியைக் காதலித்து வந்தார். அப்போது, அச்சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததில், அவர் கர்ப்பமடைந்தார். இதையடுத்து, கருக்கலைப்பு செய்யப்பட்டது.
இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், வழக்குப் பதிந்து பிரவீன்குமாரைக் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பிரவீன்குமாருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.