தஞ்சை பேராவூரணி அருகே பண மோசடி செய்ய முயன்ற ஒருவர் கைது: மற்றொருவர் தலைமறைவு 

கைது செய்யப்பட்டுள்ள பாலசுப்பிரமணியன்
கைது செய்யப்பட்டுள்ள பாலசுப்பிரமணியன்
Updated on
1 min read

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கிவிட்டு, திரும்ப கேட்டு மிரட்டல் விடுத்த ஒருவர் கைது. மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.

திருச்சிற்றம்பலத்தை அடுத்த துலுக்க விடுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (55), வட்டி தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (49) என்பவருக்கு 2017-ம் ஆண்டு ரூ. 13.50 லட்சம் வட்டிக்குக் கடனாக வழங்கியுள்ளார். அதன் பிறகு காமராஜ், வட்டியும்,அசலுமாக சேர்த்து பணம் வழங்கியுள்ள நிலையில், மீதம் ரூ. 1 லட்சம் பாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காமராஜ் கொடுத்திருந்த 3 காசோலைகளை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் ரூ. 1 லட்சத்திற்கு பதிலாக ரூ. 13.50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் காமராஜ் ரூ. 1ல ட்சம் மட்டும்தான் தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் பாலசுப்பிரமணியன், பேராவூரணி அருகேயுள்ள தூராங்குடியை சேர்ந்த அவரது உறவினர் முருகானந்தம் என்பவரிடம் காமராஜ் கொடுத்த காசோலையை கொடுத்து, வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி என காமராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காமராஜ் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் பணம் வாங்கிய தேதியிலிருந்து திரும்பப் பணம் வழங்கியது வரையுள்ள அனைத்து ஆதாரங்களுடன் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ஜெயா, காசோலையை மோசடி செய்யும் நோக்கத்தில் வங்கியில் டெபாசிட் செய்ததாகவும், இதற்கு உடந்தையாக இருந்த முருகானந்தம் ஆகியோர் மீது, 420, 323, 294பி, 506(2) மற்றும் அதிக வட்டி வசூல் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, பாலசுப்பிரமணியனை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள முருகானந்தத்தை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in