Published : 10 May 2023 05:28 PM
Last Updated : 10 May 2023 05:28 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 கோடி மதிப்பிலான 2100 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்படி 'ஆபரேசன் கஞ்சா வேட்டை 4.O' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் போலீஸார் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருச்செந்தூர் பகுதியில் இருந்து அண்மை காலமாக இலங்கைக்கு அதிகமாக கஞ்சா கடத்தப்படுவது தெரியவந்துள்ளது.
இதனால் போலீஸார் திருச்செந்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்செந்தூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியில் ஒரு தோட்டத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வேனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான 120 கிலோ கஞ்சாவை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஒரு தோட்டத்தில் 2100 கிலோ கஞ்சாவை மதுரை போலீஸார் நேற்று நள்ளிரவு பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை கீரைத்துறை காவல் நிலைய பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை கீரைத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்த போது கஞ்சாவை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் என்பவரிடம் வாங்கியதாக கூறியுள்ளார். இதையடுத்து மதுரை கீரைத்துறை போலீஸாரை தூத்துக்குடியை சேர்ந்த ஆரோன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது சாத்தான்குளம் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் மதுரை போலீஸார் 2 வேன்களில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் பகுதியில் உள்ள அந்த தோட்டத்துக்கு வந்து, உள்ளூர் போலீஸார் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சாக்கு பைகளில் குவியல் குவியலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீஸார் இரவு விடிய விடிய எடை போட்டனர். மொத்தம் 2100 கிலோ கஞ்சா அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.20 கோடி இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சாக்கு பைகளில் கட்டி வேனில் ஏற்றி போலீஸார் மதுரைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மதுரையை சேர்ந்த 2 பேர், தூத்துக்குடியை பகுதியை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து மதுரை கீரைத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை தோட்டத்தில் பதுக்கி வைத்து படகுகள் மூலமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் ஒரே இடத்தில் 2100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT