

சென்னை: சென்னையில் ஓட்டலில் தங்கியிருந்த 4 பேரிடம் போலி கைத்துப்பாக்கி, கோபுர கலசத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள விடுதி அறையில் சந்தேகப்படும்படியாக சிலர் தங்கி இருப்பதாக கோயம்பேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விடுதிக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களது உடமைகளை போலீஸார் சோதனை செய்தனர்.
அவர்களிடம் ஒரு கைத் துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள், கை விலங்கு, கோபுரகலசம், கருப்பு அரிசி 50 கிராம், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ’
விசாரணையில், அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்த சிவா (39), கேரளாவைச் சேர்ந்த குபாய்து (37), ஜித்து (24), இஸ்ராம் (22) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் போலியான கோபுர கலசத்தை விற்று, பணம் மோசடி செய்வதற்காக சென்னைக்கு வந்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.