

சேலம்: சேலம் அருகே காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே காடையாம்பட்டி ஜோடுகுளி என்ற இடத்தில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையையொட்டி செல்வம் (63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க 3 பேர் முயன்றனர்.
ஒருவர் வெளியே பாதுகாப்புக்கு நிற்க, மற்ற 2 பேர் காஸ் சிலிண்டரை வைத்து வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு கட்டிட உரிமையாளர் செல்வம் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். உடனே ஏடிஎம் மையத்தின் வெளியே நின்றவர் அங்கிருந்து தப்பினார். ஏடிஎம் மையத்துக்குள் 2 பேர் இருப்பதைக் கண்ட செல்வம், ஷட்டரை இழுத்து பூட்டினார்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து ஷட்டரை திறந்து உள்ளே இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், ராஜஸ்தானைச் சேர்ந்த ரைஸல் கான் (20), உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான நபர் என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர். ஏடிஎம் கொள்ளையர்களை பிடித்துக் கொடுத்த கட்டிட உரிமையாளர் செல்வத்தை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.